×

நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஆவணப்பதிவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது; பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் எச்சரிக்கை

சென்னை:  பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரி. சேலையூர் ஏரி, அவற்றின் உள்நீர்வழிப்பாதை மற்றும் உபரி நீர் வெளியேற்றும் பாதை ஆகியவை தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் உள்ளதாகவும், இதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் ஏரியினை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழப்படுவதாகவும் இதனால், உயிரிழப்புகள் பண இழப்புகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும். நீர்நிலை ஆக்கிரமிப்பினால் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் தெரிவித்து அதனை அகற்றிடவும் சிட்லப்பாக்கம் ஏரிக்கு சொந்தமான நிலத்தினை மீட்டிடவும் ‘அறப்போர் இயக்கம்’ என்ற அமைப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டதில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையில் மேற்கண்ட ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் 2.11.2021ம் தேதி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், உள் மற்றும் வெளி நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுப்பதன் பொருட்டு ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனைச் சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் எந்த ஆவணப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.. இதனை தங்களின் எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலர்கள் சரிவர கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களும் துணை பதிவுத்துறை தலைவர்களும் உறுதி செய்திட கோரப்படுகிறது.

இதனை மீறி ஆவணங்கள் எதும் பதிவுசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர், மாவட்ட பதிவாளர் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள். அவர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் - 1973 விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட சொத்துக்களை தமிழ்நிலம் மென்பொருள் வழி கண்டறியவும் கணினி மயமாக்கப்படாத நத்தம் நிலங்களை பொருத்து அவற்றில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளின் விபரங்களை வருவாய் துறையினரை தொடர்பு கொண்டு சொத்துக்களின் பட்டியல்.  பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வழிகாட்டி பதிவேட்டில் மேற்கண்ட நிலங்களுக்கு ‘O’ பூஜ்ஜிய மதிப்பு உட்புகுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IG ,Shiva ,Arul , Documentation should not be carried out on water bodies, waterways, catchment areas, or government outlying lands; Registry IG Shiva Arul Warning
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!