நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரசார் 1ம்தேதி முதல் மனு வழங்கலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 1ம்தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 1ம்தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தலில் போட்டியிட விரும்புகிற பொது பிரிவினர் ரூ.1000, பட்டியலினத்தவர்கள் மற்றும் மகளிர் ரூ.500 என்கிற கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்ள வேண்டும். சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More