90 அணைகளில் 204.9 டிஎம்சி நீர் இருப்பு: நீர்வளத்துறை தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் நீர் இருப்பு 204.95 டிஎம்சியாக உள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக, 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93 டிஎம்சியாகவும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் நீர் இருப்பு 31.95 டிஎம்சியாகவும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் நீர் இருப்பு 3.88 டிஎம்சியாகவும், 10.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு 7.49 டிஎம்சியாகவும் உள்ளது.

6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 5.67, 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 5.22, 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 3.17, 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.63 டிஎம்சி, 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 2.4 டிஎம்சி, 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.50 டிஎம்சி, 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 3.60 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

சோலையாறு அணையில் 5.06 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதன் கொள்ளளவு 5.04 டிஎம்சி. 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 13.18 டிஎம்சி நிர் இருப்பு உள்ளது. 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 3.78, 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 1.52 டிஎம்சி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து, அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் நீர் இருப்பு 204.9 டிஎம்சியாக  உயர்ந்துள்ளது. 91.38 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.  இந்த நிலையில், இன்னும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் முக்கியமான அணைகளில்  முழு கொள்ளளவு வரை நீர் இருப்பை வைத்திருக்காமல் 3 அடி முதல் 5 அடி வரை குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைகளின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More