×

கொடைக்கான‌லில் கூடாரம் அமைத்து த‌ங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அரசு தடை..!!

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் நிரந்தர கட்டட அமைப்பு இல்லாமல் கூடாரம் அமைத்து தங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி கூடாரங்கள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்தால் நில உரிமையாளர்கள், கூடாரம் அமைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலை ரசிக்க வருபவர்களை குறிவைத்து புதுவிதமாக டென்ட் ஹவுஸ் எனப்படும் கூடார வீடுகள் அமைத்து வாடகைக்கு விடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் நில உரிமையாளர்களும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து தற்காலிக கூடாரங்கள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்கவைத்து பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசிக்கின்றனர். கொடைக்கானல் மலை பகுதியில் டென்ட் அமைக்க தடை உள்ள சூழலில் அதை கண்டுகொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களை பார்த்துவிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதில் தங்குகின்றனர்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது. ஆனால் இதனை அறியாமல் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கூடாரங்களில் தங்குவதால், உயிர்பலி ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் இரவில் இதுபோன்ற தற்காலிக டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அரசின் தடையை மீறி டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்தால் நில உரிமையாளர்கள், டென்ட் அமைப்பவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகருக்கு ஒதுக்குப்புறமாகவும், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் அமைக்கப்படும் டென்ட் ஹவுசில் போதை காளான் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் வழங்கப்படுவதாகவும், இரவு நேர மது விருந்துக்கு ஏற்பாடு செய்து ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏற்கனவே அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்து மதுவிருந்து நடத்தப்பட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நள்ளிரவில் பிடிபட்டனர். தொடர் புகார்கள் குவிந்ததால் டென்ட் ஹவுஸ் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்படும் கன்டெய்னர் ஹவுஸ்களுக்கு வருவாய்த்துறை முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Dent House , Kodaikanal, Tent House, Tourist
× RELATED கொடைக்கான‌லில் த‌ங்கும் டென்ட் ஹவுஸ்,...