×

இருள் சூழ்ந்திருந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி குமரியில் வெளிச்சம் பெற்ற குக்கிராமங்கள்-பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மின்சாரம்

குலசேகரம் :  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்ததன் மூலம் திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி கிடந்த கிராமங்களுக்கு மின்வசதி  செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் புதிய குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுப்பதற்காக சாலைகளை கட்டமைக்கும் உள்ளாட்சி அமைப்புகள், மின்சாரம் மற்றும் தெரு விளக்குகளை கண்டுகொள்வதில்லை. மின் கம்பம் மற்றும் அது சம்பந்தமான தேவைகளுக்கு மின் வாரியத்தை நாட வேண்டி உள்ளது.

ஆனால் பல்வேறு காரணிகளால், மின் இணைப்பு விஷயத்தில் இழுபறி ஏற்படுகிறது. வசதி படைத்தவர்கள் வீடுகள் அமைக்கும் போது தங்கள் பகுதி வரைக்கும் தேவையான மின் கம்பங்களுக்கு பணம் செலுத்தி, மின் இணைப்பு பெற்று கொள்கின்றனர். சாதாரண மக்களால் இவ்வாறு மின் இணைப்பு பெறுவது பெரும் சவாலாக மாறுகிறது.  வருட கணக்கில் மின் இணைப்பிற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் தவித்த மக்கள் பல கட்ட போராட்டங்களுக்கு பின், உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற பிரசாரத்தின் வாயிலாக மின் இணைப்பு பெற்று, இப்போது மகிழ்ச்சி கடலில் திளைத்து வருகிறார்கள். குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட உண்ணியூர்கோணம் பகுதியில் இருந்து வடக்கூட்டுவிளை, கரும்பாலி விளை, பொட்டல்குளம் வழியாக நாககோடு, அம்பலத்துவிளை செல்லும் சாலை, முக்கியமான இணைப்பு சாலையாகும். இந்த சாலையின் ஒரு பகுதி குலசேகரம் பேரூராட்சிக்கும், மற்றொரு பகுதி திற்பரப்பு பேரூராட்சிக்கும் உட்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

சாலையின் இரு பக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் மின் கம்பங்கள் நடப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பு இல்லை. மின் இணைப்பு உள்ள பகுதிகளிலும் தெரு விளக்குகள் பொருத்தபட வில்லை. உள்ளூர் மக்களுக்கு அதிகம் பயன்படும் சாலை இரவு நேரத்தில் இருளாக இருப்பதால் சமூக விரோத கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இதே போன்று திற்பரப்பு பேரூராட்சி 15வது வார்டுக்குட்பட்ட விலவூர் கோணம் காலனி, மாடத்தூர் கோணம், பொட்டல்குளம் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மின் இணைப்பு மற்றும் தெருவிளக்கு இல்லாத நிலை இருந்தது. இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்போன் வெளிச்சத்தில் நடந்து சென்றனர். இதே போல் மாடத்தூர் கோணம் கைதகாடு பகுதி விலவூர் கோணம் சானல்கரை பகுதி, மாடத்தூர்கோணம் சாலைகரை பகுதி போன்ற இடங்களில் மின்கம்பங்கள் இருந்தும் தெருவிளக்குகள் இல்லாத நிலை இருந்தது. இந்த பகுதிகளில் சுமார் 35 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல், மின் இணைப்புக்காகவும், தெருவிளக்கு வசதிக்காகவும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களோடு அலைந்து திரிந்தனர்.

இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை, திமுக பிரமாண்டமாக நடத்தியது. அந்த வகையில்  குமரி மாவட்டத்துக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வந்து மனுக்களை பெற்றதுடன், திமுக ஆட்சி வந்ததும் 100 நாட்களில் இதில் வழங்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அந்த வகையில் திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் யோபு, மேற்கண்ட கிராமங்களில் நிலவும் மின் இணைப்பு பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்திருந்தார்.  முதலமைச்சராக பொறுப்பேற்றதும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை தொடங்கப்பட்டு, தனி அதிகாரி நியமிக்கப்பட்டு மனுக்களுக்கு வேகமாக தீர்வு காணப்பட்டன. அந்த வகையில் முன்னாள் கவுன்சிலர் யோபு அளித்திருந்த மனு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் குழுவினர் விசாரித்தனர். பின்னர் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்ட அவர்கள், உடனடியாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர்.

அதன்படி வடக்கோட்டுவிளை, கரும்பாலிவிளை பகுதிகளில் 15 மின் கம்பங்களும், மாடத்தூர் கோணம் பொட்டல்குளம் பகுதியில் 10 மின் கம்பங்களும் புதிதாக நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதே போல் தெரு விளக்குகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக தெரு விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டு தற்போது வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தால், தங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒரு மனுவின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொன்னதை செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

பல ஆண்டு கனவு நனவாகியது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மனு அளித்த திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்  யோபு கூறியதாவது :இருளில் தவித்த குக்கிராமங்களான வடக்கோட்டுவிளை, கரும்பாலிவிளை, பொட்டல்குளம், மாடத்தூர் கோணம் போன்ற பகுதிகளில் மின் இணைப்பு மற்றும் தெரு விளக்குகள் என்பது கனவாகி போனது.  பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு அலுவலகங்களுக்கும் ஏறி இறங்கினோம். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

5 ஆண்டுகளுக்கு முன், திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகள் பின்னர் கண்டு கொள்ள வில்லை. அதிமுக ஆட்சியில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இந்த திட்டம் கிடப்பில் கிடந்த நிலையில் தான், உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்தது. இதில் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், நாகர்கோவிலில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வுக்கு சென்று மனு அளித்தேன்.  மு.க.ஸ்டாலின் கூறிய படியே அவர் முதல்வராக பொறுப்பேற்றதும், இந்த கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். சென்னையில் இருந்து அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டனர். மின் வாரிய அதிகாரிகளும் வந்து சம்பவ இடத்தை பார்த்தனர். பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுவரையிலும் கிடைத்த ஏமாற்றங்களுக்கு முற்று புள்ளிவைக்கும் வகையில் வெளிச்சம் கிடைத்துள்ளது. பல ஆண்டு கனவு நினைவாகியது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியுடன் இருப்போம் என்றார்.

48 லட்சத்தில் சாலை சீரமைப்பு

இதேபோன்று திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட விலவூர் கோணம் காலனி சந்திப்பிலிருந்து பாலிசி குளம் செல்லும் அப்துல்கலாம் சாலை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்துக்கு பயனற்றதாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க ஆண்டு கணக்கில் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்ததன் பலன் இந்த சாலையை பேவர்பிளாக் அமைத்து சீரமைப்பதற்கு 48 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

தீர்வு தளத்தால் நிம்மதி

தற்போது முதல்வர் உத்தரவுப்படி மக்களை தேடி சென்று கோரிக்கை மனு பெறும் தீர்வு தளம் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி குமரி மாவட்டம் பொன்மனையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த தீர்வு தளம் நிகழ்ச்சியில், பொன்மனை வண்ணாரங்கோடு காலனியில் மின் கம்பிகள் தாழ்வாக ஆபத்தான நிலையில் செல்வதாக அப்பகுதியை சேர்ந்த பிரமிளா என்பவர் மனு கொடுத்தார். அம் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு 9 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. வெண்டலிகோடு, பனவிளை பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கொடுத்த மனுவுக்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு, பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags : Kumari , Kulasekara: Dissatisfaction with petitioning for Stalin's program in your constituency has darkened the Kulasekara municipality for many years.
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...