திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கணிக்கர் சாதிச்சான்று வழங்க கோரி குடுகுடுப்பைகாரர்கள் மனு-டிஆர்ஓவிடம் வழங்கினர்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குடுகுடுப்பைகாரர்கள் தங்களுக்கு கணிக்கர் இன சாதிச்சான்று வழங்க கோரி டிஆர்ஓவிடம் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ முத்துகுமாரசாமி தலைமையில் நேற்று நடந்தது.  இதில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருமண உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, உதவித்ெதாகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,020 மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓ உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் மற்றும் ஆரணியில் வசித்து வரும் குடுகுடுப்பைகாரர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கணிக்கர் சாதிச்சான்று வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் கூறுகையில், நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பதினர் வசித்து வருகிறோம். எங்களது குழந்தைகள் கல்வி பயில முக்கிய தேவையாக சாதிச்சான்று உள்ளது. வேறு மாவட்டங்களில் எங்கள் இனத்தவர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் எங்களுக்கு கணிக்கர் சாதிச்சான்று வழங்கிட நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதேபோல், புதுமல்லவாடி கிராமத்தில் வசிக்கும் தாழ்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள், நாங்கள் வசித்து வரும் பகுதி தற்போது நீர் பிடிப்பால் சூழ்ந்துள்ளது. இதனால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், தண்டராம்பட்டு  தாலுகா தானிப்பாடி புதுத்தெருவில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்ட மலைக்குறவரின மக்கள் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசு சலுகைகளும் கிடைக்கவில்லை, சாதிச்சான்றும் இல்லை, எனவே முதலமைச்சர் சிறப்பு திட்டத்திலாவது நாங்கள் பயனடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்வு கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கொண்டுவரும் பைகளை சோதனை செய்த பின்னரே போலீசார் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

Related Stories: