நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலோடு 6 பேர் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு

நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் எண்ணத்தோடு, பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் போலீசார் சோதனையில் சிக்கினர்.நெல்லை மாவட்டம், வி.கே.புரம், அடையகருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் முருகன் (62). இவரது மனைவி ராணி (58). இவர்களுக்குரிய சொந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை அளந்து தர மனு அளித்தும், அதற்கான நடவடிக்கை இல்லை என்று கூறி தம்பதி இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சோதனை நடத்திய ேபாது மண்ணெண்ணெய் பாட்டில் சிக்கியது.

போலீசார் அந்த பாட்டிலை பறிமுதல் செய்து, அவர்களை மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.  காவல் நிலையத்திற்கும், சர்வேயர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து நடையாய் நடந்து கொண்டிருப்பதால், தீக்குளிக்கும் எண்ணத்தோடு வந்ததாக இருவரும் தெரிவித்தனர்.இதே போல் பழவூர், கண்ணன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவரது மனைவி சுனிதா (40). இத்தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளோடு, நேற்று ஒரு பேக்கில் மண்ணெண்ணெய் பாட்டிலை வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அங்கு வாசலில் சோதனையின் போது போலீசாரிடம் பேக்கை திறந்து காண்பிக்க மறுத்தனர்.

போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தி, பேக்கை திறந்தனர். அதில் மண்ணெண்ணெய் பாட்டில் பிடிபட்டது.நகையை மீட்டுத் தர மறுக்கும் போலீசை கண்டித்து குடும்பத்தோடு தற்கொலை செய்ய வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், அறிவுரை கூறி மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

பின்னர் செல்வக்குமார் தம்பதி அளித்த மனுவில், ‘‘எங்களுக்கு சொந்தமான 20 பவுன் நகை கடந்த 21.1.20 அன்று காணாமல் போய் விட்டது. இதுகுறித்து பழவூர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. நகையை எடுத்துச் சென்றதாக சந்தேகப்படும் பெண் மீது புகார் கொடுத்தும் போலீசார் அதை விசாரிக்கவில்லை. எனவே முறையான விசாரணை நடத்தி எங்களது நகையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியிலும் பெண் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் பொன் இசக்கி (30). இவரது  கணவர்  வெளிநாட்டில் வேலை செய்து வரும்நிலையில் தூத்துக்குடி விமான  நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக  பொன் இசக்கி பணியாற்றி வருகிறார். இதில் அவர், தன்னுடன் பணியாற்றிய ஒருவருக்கு பணம் கொடுத்தாராம். பின்னர் இந்த பணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பிக்கேட்டபோது  ஆத்திரமடைந்த அந்நபர், பொன் இசக்கியை மிரட்டினாராம்.

 இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முறப்பநாடு  போலீசார், அந்நபரை கைதுசெய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அந்நபர், பொன் இசக்கிக்கு மீண்டும் மிரட்டல் விடுத்தாராம். இதனால் மனமுடைந்த பொன் இசக்கி, தனக்கு மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்தார்.

அதன்படி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை தனது குழந்தை மற்றும்  தாயுடன் வந்த பொன் இசக்கி, திடீரென தான்  கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொன் இசக்கி மீது தண்ணீரை ஊற்றி அவரை  மீட்டு புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: