அன்னவாசலில் பரபரப்பு இருதரப்பினர் மோதல், சாலை மறியல்-6 பேர் கைது

விராலிமலை : அன்னவாசலில் இரு தரப்பு மோதலையடுத்து ஒரு தரப்பினர் பஸ் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்னவாசல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் நேற்று முன்தினம் அன்னவாசல் பெரிய குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முருகையா என்பவர் மணிகண்டனை திட்டி குளத்தில் குளிக்கக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றியுள்ளது. இதில் மணிகண்டனுக்கு ஆதரவாக நாகராஜ், ஆறுமுகம், தாஸ், பாவேந்தன் ஆகியோர் சேர்ந்து முருகையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முருகையாவுக்கு ஆதரவாக யோகேஸ்வரன், சூர்யா ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் இருவரும் காயமடைந்த நிலையில் முருகையா புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் சிறு காயங்களுடன் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருதரப்பினரும் அன்னவாசல் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முருகையா தரப்பினர் உடனே மணிகண்டன் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் செங்கப்பட்டி எனுமிடத்தில் நேற்று (திங்கள்கிழமை) பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த மாவட்ட கூடுதல் எஸ்பி ரெஜினாபேகம், டிஎஸ்பி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து இரு தரப்பு புகார் மீது வழக்குப்பதிவு செய்த அன்னவாசல் போலீசார் முருகையா அளித்த புகாரின் பேரில் நாகராஜ், ஆறுமுகம், தாஸ், பாவேந்தன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் மணிகண்டன் அளித்த புகாரை தொடர்ந்து யோகேஸ்வரன், சூர்யா ஆகியோரை கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் கிளை சிறையில் அடைத்தனர்.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பஸ் மறியலால் அப்பகுதியில் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: