×

தொடர் மழையில் இருந்து நெல், பருத்தி பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் விளக்கம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லூனர் தெரிவித்துள்ளார்.மழையால் நெல், பருத்தி, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடாலிகருப்பூர், ஆரனூர், கல்லக்குடி மற்றும் கடம்பூர் போன்ற பகுதிகளை வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு மழை நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

அதன்படி விவசாயிகள் மழை நின்றவுடன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் கூறுகையில். தண்ணீரில் மூழ்கியுள்ள நெல் பயிருக்கு உடனடியாக 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தழைச்சத்து உரத்தை அமோனியா வடிவில் இடுவதனால் எளிதில் பச்சையம் பயிருக்கு திரும்பக் கிடைக்கும்.சூல் கட்டும் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 2 கிலோ டி.ஏ.பி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிவான கரைசலுடன் ஒரு கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். தண்ணீர் வடிந்து விட்ட நிலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு நாள் வைத்திருந்து பிறகு 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இடவேண்டும்.

இந்த உரங்களை இடும்போது வயலில் சீராக தண்ணீர் வைத்துக் கொண்டும், தண்ணீர் வெளியே விடாதவாறும் பராமரிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலில் கலந்து வயல் முழுவதும் சீராக தூவ வேண்டும். நெல்லில் இலைச்சுருட்டுப் புழு தாக்கப்பட்ட வயல்களில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு, பட்டு போன்ற மெல்லிய இழைகளால் இணைந்து புழுக்கள் உள்ளிருந்து கொண்டு இலைகளை சுரண்டி உண்ணுவதால் வெள்ளை நிற பட்டை காணப்படும்.

இதனைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு புரோபனோபாஸ் 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். நெல்லில் காணப்படும் குலைநோயைக் கட்டுப்படுத்த 1 கிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் உடன் 1 லிட்டர் புளித்த தயிரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது புரோபிகோனோசோல் ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளித்து குலை நோய் கட்டுப்படுத்தலாம்.

Tags : Center for Agricultural Sciences , Widespread rains lashed various parts of Ariyalur district. Regarding the ways in which the crops are not affected
× RELATED வேளாண்மை அறிவியல் மையத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி கருத்தரங்கு