ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிய வாகனம் பறிமுதல்.: கரூர் அருகே தோகைமலை பகுதியில் வேன் சிக்கியது...தப்பியோடிய வேன் ஓட்டுநருக்கு போலீஸ் வலை

கரூர்: கரூரில் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிய வாகனத்தை  கண்டுபிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பியோடிய வாகன ஓட்டுநர் சுரேஷ்குமாரை தேடிவருகின்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கல்பட்டு என்ற இடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆய்வாளர் கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து விசாரணை செய்ய கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கனகராஜ் கொலை செய்யப்பட்ட நேரத்தில் 14 வாகனங்கள் அந்த பகுதியை கடந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பல்வேறு கேமராக்களை ஆய்வு செய்த் தனிப்படை காவல்துறையினர், வேன் ஒன்று ஆய்வாளர் கனகராஜ் மீது மோதியதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை காவல்துறையினர், தோகைமலை அருகே நின்றிருந்த வேனை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி செல்ல இந்த வேன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை, தப்பியோடிய ஓட்டுநர் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: