×

ஆஸ்திரியாவில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்!: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..!!

ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய பொது முடக்கம் அமலுக்கு வந்தது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் தொடங்கிய பொதுமுடக்கமானது 10 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பணிக்கு செல்வது, மாளிகைப்பொருட்கள் வாங்குவது, மருத்துவர்களிடம் செல்வது அல்லது உடற்பயிற்சி உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் உணவகங்களை மூடவும், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் அறிவித்தார்.

பெரும்பாலான வர்த்தக மையங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1 முதல் ஆஸ்திரியாவில் தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட இருப்பதாக அந்நாட்டு வானொலி தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியதற்கு பின்னர் ஆஸ்திரியாவில் 4வது முறையாக தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Austria , Austria, General Freeze, Corona
× RELATED ஆஸ்திரியாவில் வித்தியாசமான பந்தயம்…...