10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புத்துயிர்: திருப்பூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: அதிமுக ஆட்சிகாலத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருப்பூர் மாவட்டத்தில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1,339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை வருவாய் துறை உள்பட 21 துறைகள் சார்பில் 4,335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்மை ஆளாக்கிய அறிஞர் அண்ணா-பெரியார் என இரு பெரும் தலைவர்கள் முதன்முதலில் சந்தித்த இடம் திருப்பூர். இப்படி திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உள்ளன. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதுபோல், உங்கள் முகமலர்ச்சியை பார்த்து பூரிப்படைகிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் அது, ஒரு கட்சியின் அரசாக இருக்காது, ஒரு இனத்தின் அரசாக வெற்றி நடைபோடும் என தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னேன். தமிழ் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் இந்த மேடையில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக கலைஞர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது. அதனால்தான் அதற்கு புத்துயிரூட்ட திட்டமிட்டு, இன்றைய தினம் ரூ.25 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்றதும் 5 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டேன். அதில், முக்கியமானது மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம், அதேபோல் மகளரிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் ரத்து. இது, மகளிர் சமுதாயத்தின் மீது இந்த ஆட்சி வைத்திருக்கிற அக்கறையின் வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஏராளமான திட்டங்களை மகளிர் மேம்பாட்டுக்காக இனியும் நிறைவேற்றுவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகியுள்ளது. இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளது. 6 மாதத்திலேயே இத்தனை பணிகள் செய்துள்ளபோது, இன்னும் நான்கரை ஆண்டுகளில் எத்தனை பணிகள் செய்யப்போகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த சாதனைகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில்கூட பாராட்டுகிறார்கள். அன்றாடம் பாராட்டு வந்து குவிகிறது. அரசின் செயல்பாடுகளை வடமாநில ஊடகங்களும் பாராட்டுகின்றன. இந்த பாராட்டுகள் அனைத்தும் எனக்கு, என ஒருபோதும் நான் நினைக்க மாட்டேன். தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பாராட்டாகத்தான் கருதுகிறேன்.  பல்வேறு மாநில முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டு, நம்பர் ஒன் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள். இது, பெருமை தான். நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொல்வதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறோம். எங்களுக்கு நீங்கள் உத்தரவிடுங்கள், அதை முடிக்க தயாராக இருக்கிறோம். 5 மாதங்கள் மட்டுமல்ல, 5 ஆண்டுகளும் திமுக ஆட்சி இப்படித்தான் செயல்படும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். உங்களுக்காக ஆட்சி நடத்த, நீங்களும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories:

More