×

நடிகை கங்கனாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்கள்: சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டம்

புதுடெல்லி: ‘தொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறி வரும் கங்கனாவை சிறையில் அடையுங்கள். இல்லை என்றால், அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்கள்’ என்று சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டத்துடன்  கூறியுள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், சமீபத்தில் நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பாகவும், மகாத்மா காந்தி குறித்தும் ேபசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. தற்போது ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியுள்ள கங்கனா, ‘காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷூவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளை காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒருவர் அவர்களுக்கு தேவை’ என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அகாலி தளத்தின் தலைவரும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக்குழு தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, `வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் இயக்கம் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த சீக்கிய சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், அவர்களை இந்திரா காந்தி கொசுக்களை நசுக்குவது போல் நசுக்கியதாகவும் கூறியுள்ளார். வெறுக்கத்தக்க கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் கங்கனாவை சிறையில் அடைக்க வேண்டும் அல்லது மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியது, விவசாயிகளை அவமதிப்பது போல் இருக்கிறது.  அவர் வெறுப்பு கருத்துகளை பரப்பும் தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பத்ம விருதுகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அவருக்கு எதிராக டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Kangana , Actress Kangana, Sikh Gurudwara Leader
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...