×

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் அடுத்த ஆண்டில் தயாரிப்பு ஆரம்பம்

புதுடெல்லி: தற்போதைய நிலையில், உலகளவில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களே அதிதீவிர சக்தி கொண்ட விமானங்களாக திகழ்கின்றன. இந்த ஜெட் விமானங்களை உற்பத்தி செய்வது மிகவும் சிக்கலானது, அதிக செலவையும் ஏற்படுத்தக் கூடியது. இதனால் அமெரிக்கா (எப்ஏ-22 ரேப்டர் மற்றும் எப்-35 லைட்டினிங் 2), சீனா (செங்குடு ஜெ-20) மற்றும் ரஷ்யா (சுகோய்-57) ஆகிய 3 நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை விமானத்தை கொண்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட பிற சில நாடுகள் ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இரட்டை இன்ஜின் கொண்ட அதிநவீன நடுத்தர ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் கடந்த 2011ல் தொடங்கப்பட்டு, 2018ல் இறுதி செய்யப்பட்டது. ஆனால் இதன் அதிசக்தி வாய்ந்த இன்ஜின் தயாரிப்பது சிக்கலான பணி என்பதால் இத்திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தனது விமான மேம்பாட்டு அமைப்பின் மூலம் அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தின் மாதிரி, அடுத்த ஆண்டு  துவக்கத்தில் ஒன்றிய அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விமானம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி, 25 டன் எடையுள்ள 5ம் தலைமுறை விமானத்தை தயாரிக்க முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இதன் முதல் மாதிரி விமானம் 2025-26ம் ஆண்டில் தயாரிக்கப்படும். பின் மார்க்-1 ஜெட் விமானங்களின் உற்பத்தில் 2030-31ம் ஆண்டில் தொடங்கும். இந்த விமானங்கள் 2035ம் ஆண்டில் விமானப்படையில் இணைக்கப்படும் என திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்புகள் என்ன?
* 25 டன் எடை கொண்ட 5ம் தலைமுறை விமானங்கள் மணிக்கு 2,655 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 2,800 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.
* இது பன்னோக்கு வகை போர் விமானம். எதிரி நாடுகளுக்குள் புகுந்து ரேடார் கண்களில் சிக்காமல் தாக்குதலை கச்சிதமாக முடித்துவிட்டு திரும்பும். வான் தாக்குதல்களை முறியடிக்கும். எதிரி விமானங்களை வழிமறித்து அழிக்கும்.
* ஒருங்கிணைந்த ரேடார் கட்டுப்பாட்டு அமைப்புடையது. எளிதாக வளைந்து நெளிந்து பறக்கும் என்பதால், எதிரிகளின் ஏவுகணைகளில் சிக்காது.
* இதில் சூப்பர் க்ரூஸ் அம்சம் பொருத்தப்படுவதால், கூடுதல் எரிபொருள் வசதி தேவையின்றி சூப்பர்சோனிக் பயண வேகத்தை எட்டும்.
* ஐந்தாம் தலைமுறை விமானங்கள் மூலம் இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு இந்த போர் விமானங்கள் வரப்பிரசாதமாக அமையும்.
* 59,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள 36 ரபேல் போர் விமானங்கள் 4.5ம் தலைமுறை விமானங்களாகும்.

Tags : Mac ,India , Make in India, fifth generation, fighter aircraft
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை