பாக். விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர்சக்ரா’ விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்த இந்திய விமானப்படை கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு, வீர சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் பதன்கோட்டில் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்தன. அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி பறந்தன. உடனடியாக, இந்திய போர் விமானங்கள் சீறிப்பாய்ந்து, பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தன. அப்போது நடந்த சண்டையில், தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டரான அபிநந்தன் வர்தமான், மிக்-21 விமானம் மூலமாக பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த அவர் 3 நாட்களுக்குப் பிறகு தாய்நாடு திரும்பினார். அபிநந்தனின் மிகச்சிறந்த சேவையை பாராட்டி, கடந்த 2019ல் அவருக்கு ஒன்றிய அரசு வீர் சக்ரா விருதினை அறிவித்தது. அதோடு, விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, குழு கேப்டனாக சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், வீர தீர செயல் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதினை வழங்கி கவுரவித்தார். விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Related Stories:

More