×

நிட்டோ ஏடிபி பைனல்ஸ்: அலெக்சாண்டர் சாம்பியன்

டுரின்: நிட்டோ  ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். உலக தர வரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்ற ஏடிபி  பைனல்ஸ் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் நடந்தது.
இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டானில்  மெத்வதேவ் (2வது ரேங்க், 25 வயது), முன்னாள் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3வது ரேங்க், 24 வயது) மோதினர். அரையிறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழத்திய உற்சாகத்தோடு 2ம் நிலை வீரரை ஸ்வெரவ்  எதிர்கொண்டார். இரு வீரர்களும் சளைக்காமல் போராடிய நிலையில், மெட்வதேவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்வெரவ் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று 2வது முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்பு மெட்வதேவுடன் மோதிய 5 முறையும் தோல்வியைத் தழுவியிருந்த ஸ்வெரவ், இம்முறை தனது வியூகத்தை மாற்றி முன் கையில் அதிக சதவீத தாக்குதலை மேற்கொண்டது வெற்றிக்கு வழிவகுத்தது. இத்தொடரின் முடிவில் டாப் 10 தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், அடுத்த ஆண்டு ஜோகோவிச்சிடம் (9,970 புள்ளி) இருந்து நம்பர் 1 அந்தஸ்தை தட்டிப் பறிக்க மெட்வதேவ் (8,070), ஸ்வெரவ் (7,255) இருவருக்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தற்போது 2,985 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இரட்டையர்  பிரிவு பைனலில்   பிரான்சின்  பியரி ஹெர்பர்ட் - நிகோலஸ் மஹூத் ஜோடி 6-4, 7-6 (7-0) என நேர் செட்களில்  அமெரிக்காவின் ராஜீவ் ராம் - ஜோ சாலிஸ்பெரி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags : ATP ,Alexander Champion , Nito ATP, Alexander, Champion
× RELATED சில்லி பாயின்ட்…