×

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: மத்திய குழுவிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

காஞ்சிபுரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய குழுவிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மத்திய குழு உறுப்பினர்கள் விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங், எம்.வி.என்.வரப்பிரசாத், அரசு கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, கலெக்டர்கள் காஞ்சிபுரம் ஆர்த்தி, செங்கல்பட்டு ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்பட பலர் இருந்தனர். அப்போது வெள்ள சேத ஆய்வுக்குழுவினரை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பெய்த கனமழையால், மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதாலும், ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக நீர் வெளியேறுவதாலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு, காய்கறிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முளைவிட்டு சேதமடைந்துள்ளன. மறுபுறம் சேறும் சகதியுமான வெள்ள நீரில் மூழ்கியதால் கதிர் விட்ட பயிர்களில், பால் பிடிக்காமல் முற்றாமல் உள்ளன. கரும்பு சாகுபடியில் தொடர்ந்து வெள்ளநீர் வடியாததால் வேர் அழுகல் மற்றும் ரெட்ராட் நோய் பாதிப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளநீர் சூழ்ந்ததால் காய்கறி பயிர்கள் முற்றிலுமாக அழுகிவிட்டன. மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெல், நூறு ஏக்கர் கரும்பு, 60 ஏக்கர் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்பை ஆய்வு செய்து நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், கரும்புக்கு 60 ஆயிரம், பிற பயிர்களுக்கு சேத மதிப்புக்கு ஏற்ப உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். அதேபோல், வெள்ளநீர் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வெங்கச்சேரி தரைப்பாலம், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாலாஜாபாத் தரைப்பாலம் ஆகியவற்றை உடனடியா மேம்பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் செவிலிமேடு, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் சேதமடைந்துள்ள மேம்பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். பெருமழைக் காலத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Farmers Association ,Central Committee , Heavy rain, Central Committee, Farmers Association, demand
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு