காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: செல்வம் எம்பி கோரிக்கை

காஞ்சிபுரம்:  ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சென்னை தென்னக ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு துரித இருப்புப்பாதை போக்குவரத்து (MRTS) திட்டத்தை வலியுறுத்தினார். மேலும், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் மகளிருக்கு சிறப்பு ரயில், கூடுதல் ரயில் பெட்டிகள் வேண்டும். ரயில் நிலையங்களில் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்தங்கள் அமைக்க வேண்டும்.

ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகளுக்கு சுகாதாரமான ஓய்வறை வேண்டும். கால்நடை விபத்துக்களை தடுக்க சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும். ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும். மதுராந்தகம், காட்டாங்கொளத்தூரில் விரைவு ரயில் நிறுத்த வேண்டும். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேல்மருவத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகளுக்காக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருத்தணி வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், அரக்கோணம் வழியாக மாமல்லபுரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கிண்டிக்கு சுங்குவார்சத்திரம், ஓரகடம், பெரும்புதூர், பூந்தமல்லி  ஆகிய பகுதிகளில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பேசினார்.

Related Stories: