மனைவியை தாலிக்கயிற்றால் கொன்ற கணவன் மேற்குவங்கத்தில் சிக்கினார்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே செல்லியம்மன் கோயில் அருகில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பெண் தாலிக்கயிற்றால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தாலிக்கயிற்றால் கழுத்து  நெரித்து இறந்த பெண் மீனா என்பதும், அவரை கொலை செய்த கணவன் மேற்கு வங்க  மாநிலத்திற்கு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ வேலுமணி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு மீனாவின் கணவனை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், மீஞ்சூர் எஸ்ஐ வேலுமணி தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு மீனாவின் கணவன் முடாதாஸ்(25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை தமிழகம் அழைத்து வந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருமணமான ஒரு வருடத்தில் மனைவியை ஏன் கொலை செய்தார் என்ற விவரம் விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும் என போலீசார் கூறினர்.

Related Stories:

More