மெழுகுவர்த்தியை எடுத்து வரும்படி கூறியதால் ஆத்திரம்: உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கி தந்தை படுகொலை: மனநலம் பாதித்த மகன் கைது: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: மெழுகுவர்த்தியை எடுத்துவரும்படி கூறியதால் ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கி தந்தையை படுகொலை செய்த மனநலம் பாதித்த மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). கூலி தொழிலாளி. இவரது மகன் பாண்டியன் (28), மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர். மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் பெற்றோர் மிகுந்த துயரத்துக்கு ஆளாகினர். பல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு பாண்டியனை அழைத்து சென்று விட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாலகிருஷ்ணனின் மனைவி வேலை விஷயமாக உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பாலகிருஷ்ணன், பாண்டியன் மட்டும், வீட்டில் தனியாக இருந்தனர். நள்ளிரவில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது மெழுகுவர்த்தியை கொண்டு வரும்படி மகனிடம் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், ஒரு உருட்டு கட்டையை எடுத்து, பாலகிருஷ்ணனின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த ரத்த காயத்துடன் அவர் அலறி துடித்தார். சிறிது கீழே சாய்ந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து, உடலை பார்த்து கதறி அழுதனர்.

புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More