கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூரில் ரூ.2 கோடியில் 3 ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி

சென்னை: கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் 3 ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி கட்டிடம் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நல துறை சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தபடி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும்.

இந்த கல்லூரிகளில் தலா 50 மாணவிகள் தங்கி பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கான தொடரும் செலவினமாக ரூ.91,36,104 மற்றும் தொடரா செலவினமாக ரூ.14,98,500 ஆக மொத்தம் ரூ.1,06,34,604 செலவில் தொடங்கிய நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பன் கல்லூரி வளாகத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சடையம்பட்டியிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலும் கல்லூரி விடுதி தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: