×

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, குமரி மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு: மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர்; தகுந்த நிவாரணம் வழங்க மக்கள் கோரிக்கை

சென்னை: மழைவெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மத்தியகுழு நேற்று ஆய்வு செய்தது. டெல்டா மாவட்டங்ளில் வெள்ளச்சேதங்களை மத்திய குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வுப்பணிகளை இன்றுடன் முடித்துக்கொண்டு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேத விவரங்கள் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அறிக்கையை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, முதல் கட்டமாக நிவாரண உதவியாக ரூ.2,629.29 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதில் உடனடியாக வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.549.69 கோடி விடுவிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இக்குழு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் குழுவினர் சென்னை வந்தடைந்தனர். அன்றைய தினம் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு விவரங்கள் குறித்து இக்குழுவிற்கு துறை வாரியாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்ட புகைப்பட காட்சியையும் இக்குழு நேரடியாக பார்வையிட்டது.

இதைத்தொடந்து இரண்டு குழுவாக பிரிந்து ஆய்வுப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டது. அதன்படி, ஆய்வுப்பணியின் முதல் நாளான நேற்று மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணிக்கு தங்களின் ஆய்வுப்பணியை தொடங்கியது. முதலில், புளியந்தோப்பு வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தெருக்களின் புகைப்படங்கள், பொருத்தி இருந்த பேனர்களை பார்வையிட்டனர்.

தொடர்ந்து எழும்பூர்  அழகப்பா சாலையில்  மழை நீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிவா இளங்கோ சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணி ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது, ஒவ்வொரு இடங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி மத்திய குழுவினரிடம் விளக்கமாக தெரிவித்தார். அப்போது  வருவாய் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னையில் ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு மத்திய குழு, காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பின்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்களை, ஒன்றிய குழுவினர் பார்வையிட்டனர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும்  அதிகாரிகள்  விளக்கினர். ஆய்வின் போது வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த ஒன்றிய குழுவினர் விவசாயிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது அவர்களிடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கர் நெல் சாகுபடி, 100 ஏக்கர் கரும்பு சாகுபடி, 80 ஏக்கர் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000, கரும்பிற்கு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம், பிற பயிர்களுக்கு சேதத்திற்கு ஏற்ற அளவு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, மாமல்லபுரம் தனியார் ரிசார்டுக்கு சென்றது. அங்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கு மாலை அணிவித்து மத்திய குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரிசார்ட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு சம்பந்தமாக வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சிகளை பார்வையிட்டது. பாதிப்புகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விளக்கிக் கூறினார். அதன் பின்னர், திருக்கழுக்குன்றம் அருகே வடப்பட்டினம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். அப்போது, விவசாயிகள் மழைநீரில் மூழ்கிய பயிர்களையும், அழுகிய பயிர்களையும் மத்திய குழுவிடம் காண்பித்தனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் தர்பூசணி, பரங்கிகாய், புடலங்காய், பீர்க்கங்காய், செடி முருங்கை, கத்திரிக்காய், காராமணி, பூசணிக்காய் ஆகியவைகள் பாதிக்கப்பட்டதற்கான பயிர் சேத விவர காட்சிகளை பார்த்து சேத விவரங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், 2.45 மணியளவில் புதுச்சேரி சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. இதேபோல், ஆ.பி.கவுல் தலைமையிலான மற்றொரு மத்தியக் குழு, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றது. பின்னர் கார் மூலம் நேற்று மதியம் கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர். அங்கு மதிய உணவுக்கு பின்னர் கன்னியாகுமரியில் அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த குமரி மாவட்ட மழை சேதங்கள் தொடர்பான புகைப்பட காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு மழை பாதிப்புகள் தொடர்பாக கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்தார்.

அங்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் மத்திய குழுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். பின்னர் வடக்குதாமரைக்குளம், பிள்ளைபெத்தான் அணைகட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பை பார்வையிட்டனர். இரணியல் அருகே பேயன்குழி பகுதியில் சாலை மற்றும் சானல் துண்டிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இரட்டைக்கரை சானலில் ஏற்பட்ட உடைப்பு, குமாரகோயில் பகுதியில் பகுதியில் பத்மநாபபுரம் புத்தனாறு சானல் உடைப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

மாலையில் தேங்காப்பட்டணம் அருகே வைக்கல்லூர் சென்ற அவர்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில்  ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே உள்ள வயல்வெளிகளில் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்த இடங்களை ஆய்வு செய்தனர். குழுவினரிடம், குமரி மாவட்ட நிரந்தர சீரமைப்புக்கு ரூ.250 கோடி தேவை என கலெக்டர் அரவிந்த்  தெரிவித்தார்.

இரண்டாவது நாளான இன்று ராஜிவ் சர்மா தலைமையிலான குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறது. ஆ.பி.கவுல் தலைமையிலான மற்றொரு குழு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை பார்வையிடுகிறது. இரண்டு குழுக்களும் இன்று மாலை 6.30 மணியுடன் ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு இரவே சென்னை திரும்புகிறது. நாளை காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆய்வுப்பணிகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் இக்குழு ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த ஆலோசனையின்போது மழை வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு தமிழக அரசு சார்பில் கூடுதல் நிதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட நிதியை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தப்பட உள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு நாளை மாலை 4.15 மணிக்கு இக்குழு டெல்லி புறப்பட்டு செல்லும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் எவ்வளவு நிதி வழங்கலாம் என்பது குறித்து அறிக்கையாக தயார் செய்து உள்துறை அமைச்சகத்திடம் வழங்கும். நாளை காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆய்வுப்பணிகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளது.

Tags : Chennai ,Chengalpattu ,Kanchi ,Kumari , El equipo central inspecciona los distritos de Chennai, Chengalpattu, Kanchi y Kumari: visitó a las víctimas de la lluvia y las inundaciones; Las personas exigen proporcionar un alivio adecuado
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...