×

மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் வெள்ளம் ஆற்றின் திட்டில் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த தம்பதி மீட்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆற்றின் நடுவில்  150 ஆடுகளுடன் சிக்கி தவித்த தம்பதி மீட்கப்பட்டனர். 12 மான்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டுப்பகுதி உள்ளது.

நாதல்படுகையை சேர்ந்த கணேசன், காந்திமதி தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான 150 ஆடுகளை ஆற்றின் நடுவில் உள்ள திட்டு பகுதியில் மேய்த்து வந்தனர். மேலும் ஆடுகளை அடைப்பதற்காக பட்டியும் அமைத்துள்ளனர். பகல் நேரத்தில் ஆடுகள் மேய்த்து விட்டு மாலையில் ஆடுகளை அங்கேயே பட்டியில் அடைத்து விட்டு அவர்களுக்கு சொந்தமான படகில் வீட்டுக்கு வருவது வழக்கம். கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டு ஓடுவதால் ஆற்றின் நடுவில் திட்டு பகுதியில் ஆடுகளுடன் தம்பதியினர் கடந்த சில நாட்களாக தவித்து வந்தனர்.

இதையடுத்து சீர்காழி ஆர்டிஓ நாராயணன் உத்தரவின்பேரில் தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சீனிவாசன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி தலைமையிலான வீரர்கள் 4 பைபர் படகுகள் மூலம் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் சிக்கி தவித்த தம்பதியினர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 150 ஆடுகளை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும் அந்த திட்டு பகுதியில் சிக்கி தவித்து வரும் 12 புள்ளி மான்களையும் மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kolli ,Mayiladuthurai , Pareja rescatada con 150 cabras atrapadas en una llanura aluvial cerca de Mayiladuthurai
× RELATED தஞ்சாவூர் ராஜப்பா பூங்காவில் மக்கள்...