நம்பர் 1 முதலமைச்சர் என்பது எனக்கு பெருமையல்ல; நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். சுமார் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.56கோடியே 29 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் உரையாற்றினார். அவர் பேசியதாவது;

அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கான அரசாக திமுக அரசு இருக்கும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதை திருப்பூர் மக்களிடம் காண்கிறேன்.

நம்பர் 1 முதலமைச்சர் என்பது எனக்கு பெருமையல்ல; நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை. ஆட்சிக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அதற்குள் இவ்வளவு செய்துள்ளோம்; இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்யவுள்ளோம் என எண்ணிப் பாருங்கள், 5 மாதம் அல்ல 5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதுதான்; ஆனால், கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை.

அதுகுறித்தெல்லாம் இங்கே பேச விரும்பவில்லை, ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி; அரசியல் நிகழ்ச்சி அல்ல. உத்தரவிடுங்கள்...உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள். துணை முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கும் போது, எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு நாள் முழுவதும் நின்று கொண்டே நிதியை வழங்கினேன். அதை நினைவு கூர்கிறேன். தனிப்பட்ட இந்த ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நினைக்கவில்லை; மக்களாகிய உங்களுக்கு கிடைத்த பாராட்டு இது.

Related Stories:

More