×

குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டம்

குன்னூர்: குன்னூர் கோத்தகிரி சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்களது முக்கிய பண்டிகையான சக்கலாத்தி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சக்கலாத்தி என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரக்கூடிய சனிக்கிழமை சக்கலாத்தி  பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சக்கலாத்தி பண்டிகை  துவங்கியது.

 இந்த பண்டிகையையொட்டி  மாலை 5 மணியளவில் படுகர் இன மக்கள் தங்களது முன்னோர்களை வரவேற்கும் விதமாக வனப்பகுதியில் வளரக்கூடிய 5 வகை தாவரங்களின் பூக்களை ஒரே கொத்தாக கட்டி, தங்களது வீட்டின் கூரைகளில் தலா ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சொருகி வைத்தனர். இதனை தொடர்ந்து, தங்களது வீட்டின் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை கொண்டு வீட்டின் வாசல்களில் தாங்கள் வணங்கும் இயற்கை தெய்வங்களான சூரியன், சந்திரன், கால்நடைகள், விவசாய கருவிகள் ஆகியவற்றை உருவங்களாக வரைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர்,  மாலை 6 மணியளவில் தங்களது முன்னோர்களுக்கு படைப்பதற்காக தயார் செய்த உணவுகளை அனைத்து வீடுகளிலிருந்து சேகரித்து, அதனை குடியிருப்பு பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில வாழை இலையில் வைத்து படைத்து, முன்னோர்களை வணங்கி வழிபட்டனர். இதே போல படுகர் சமுதாய மக்கள் வசித்து வரும் அனைத்து கிராமங்களிலும் சக்கலாத்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



Tags : Coonoor ,Kotagiri district , Coonoor, in the Kotagiri circuit Of the Badukar ethnic population Traditional festive celebration
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது