×

நிறைவேறுகிறது நெடுநாள் கனவு... மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில்

* டெண்டர் அறிவிப்பு வெளியானது
* ஆய்வுப்பணிகள் விரைவில் துவக்கம்

மதுரை: மதுரை மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் விரைவில் துவங்கும் வகையில், டெண்டர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. தென்மாவட்ட மக்களுக்கு அதிகம் வந்து செல்லும் முக்கிய நகராக விளங்கும் மதுரையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனாலும், மதுரை நகரத்தில் சாலை போக்குவரத்தை தவிர இதர போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பகல் நேரங்களில் பெரும்பாலான சாலைகள் எப்போதும் பரபரப்புடனும், போக்குவரத்து நெருக்கடியுடனும் காணப்படுகின்றன.

சென்னையை போலவே...
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென தொடர் கோரிக்கை இருந்தது. 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாநகரத்தில் விரைவாக அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் சாலை போக்குவரத்தை தவிர்த்து மாற்று திட்டத்தை முன்னிறுத்திக் கொண்டே இருந்தன. மதுரை நகரத்து போக்குவரத்து நெரிசலுக்கு ஒரே தீர்வு மெட்ரோ ரயில் அல்லது சென்னையைப் போல புறநகர் ரயில் சேவை தான் என்ற நிலை கட்டாயமானது. இதுகுறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

சட்டசபையில் அறிவிப்பு
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் துவங்கும் என அறிவித்திருந்தார்.

4 மாதத்தில் திட்ட அறிக்கை...
இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திட்ட பகுதிகள், பயணிகள், அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்காலத் தேவை மற்றும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து 4 மாதத்தில் திட்ட அறிக்கையை வழங்க வேண்டுமென டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வு திட்டங்களையும் கருத்தில் கொள்ளவுள்ளனர். பொது போக்குவரத்து தடங்கள், மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்தும் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன. மதுரை உள்ளூர் திட்ட குழும பகுதி, பல்கலை நகர் புதிய நகர மேம்பாட்டு ஆணைய பகுதி, திருப்புவனம் உள்ளூர் திட்டப் பகுதி மற்றும் மேலூர் உள்ளூர் திட்டப் பகுதி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன.

பல்வேறு நிலைகளில் ஆய்வு...
மதுரை விரைவு போக்குவரத்து பெருந்திட்டம் என்பதன் அடிப்படையில் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் மெட்ரோ, மெட்ரோ நியோ, மற்றும் மெட்ரோ லைட் ஆகிய வகைகளில் பயணிகள் பொது போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதன் சாத்தியம் குறித்தும் ஆய்வுகள் நடக்கவுள்ளன. திட்டப் பாதை, திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை, பயணத்திட்ட நேரம், பயண கட்டணம், ரயில் நிலையங்கள், தேவையான நிலப்பரப்பு, அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்றவகையிலான திட்டம், திட்ட மதிப்பீடு, எந்த வகையிலான நிதித் திட்டத்தின் கீழ் திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் இரண்டாம் வாரத்தில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான பணிகள் முடிவடையவுள்ளன. இதன்பிறகு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். அநேகமாக ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் ஆய்வுப் பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இதனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் துவங்கும் என நம்பலாம்.

‘திருமங்கலத்தில் இருந்து மேலூர் வரை...
சமூக ஆர்வலரும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தவருமான கே.கே.ரமேஷ் கூறியதாவது:தென்னிந்தியாவில் முக்கிய சுற்றுலா நகரமாக மதுரை விளங்குகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகளின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என பல இடங்களுக்கு செல்வோரும் மதுரை வந்து தான் செல்கின்றனர். இதனால், மதுரை நகரம் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற பெரிய நகரத்தில் ஆங்காங்கே நெரிசலில் சிக்க வேண்டியுள்ளது. சாலை போக்குவரத்தை விட்டால் மாற்று பயண வழிகளே இல்லை. மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆகவுள்ளதுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மதுரையை நான்கு திசைகளில் இருந்து இணைத்திடும் வகையில் திருமங்கலத்தில் இருந்து மேலூர் வரையிலும், திருப்புவனத்தில் இருந்து செக்கானூரணி வரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதில் எந்த சிரமமும் ஏற்படாது. தேவையான இடங்களில் ரயில் நிலையம் அமைப்பதற்கான இடங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அவசியம். தேவையான இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது சுலபமான பணி. எனவே, சாத்தியக்கூறுகளுக்கான ஆய்வுப் பணிகளை விரைவில் முடித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் இணைத்திடும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Madurai , A long dream come true ... Metro train is coming to Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...