சுற்றுலா தலமாக மாறிய பாலாறு கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க குடும்பத்துடன் குவியும் மக்கள்: வேலூர் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

வேலூர்:  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் இருகரை புரண்டோடும் வெள்ளத்தை குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்லும் பொதுமக்களால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ேமலும், தமிழகத்தில் முக்கிய அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா, ராஜாதோப்பு அணை மக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. மேலும், மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. வடகிழக்கு பருவமழையால் ேவலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மோர்தானா அணை நிரம்பி சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் பாலாற்றில் விடப்பட்டது.  மேலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாலாற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இதையறிந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களாக பாலாற்றில் இருகரை புரண்டோடும் வெள்ளத்தை பார்ப்பதற்கு வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய, புதிய பாலங்களில் குவிந்து வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாநகரின் சுற்றுலா தலமாக சொல்லும் அளவிற்கு கோட்டை தவிர வேறு ஏதுவுமில்லை. தற்போது இரு கரைகளை தொட்டபடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வேலூர் மாநகரை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து, பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்வையிட குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, மேம்பாலத்தில் இருந்து பாலாற்றை பார்வையிட போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் கெடுபிடியால் பொதுமக்கள் சற்றே அதிருப்தி அடைந்தனர். பின்னர் மேம்பாலத்தின் அருகே நின்று  செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பலர் பாலாற்றில் சீறிபாயும் வெள்ளத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்க்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை பார்க்கும் மக்களால் பாலாறு மேம்பாலம் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

Related Stories: