சேலம், கிருஷ்ணகிரியில் 4 அணைகள் நிரம்பின

* 4 மாவட்டத்தில் 134 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

* நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆதாரமாக இருப்பது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை. இந்த அணையானது கடந்த 13ம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதே போல், சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து வறண்டு கிடந்த கரியக்கோயில், ஆணைமடுவு அணைக்கட்டுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை (மேட்டூர் அணைக் கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகளும் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன. இதில் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதே போல், விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரியில் ஈச்சம்பாடி, கேசர்குளி, தும்பலஅள்ளி, தொப்பையாறு, நாகாவதி, பஞ்சப்பள்ளி, வரட்டாறு, வள்ளிமதுரை, வாணியாறு என்று 9அணைகள் உள்ளன. இதில் ஒருசில அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மற்ற அணைகளின் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளால் நீர்வரத்து தடைபட்டுள்ளது. ஆனாலும், கனமழையால் அந்த பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை, பாம்பாறு அணை என்று 3 அணைகள் உள்ளன. இந்த 3 அணைகளும் தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிவதும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அணைக்கட்டுகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில், மழையால் ஜேடர்பாளையம் தடுப்பணை உள்ளிட்ட நீர் தேக்கும் இடங்களில் வெள்ளம் நிரம்பி வழிவதும், 30க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மழையால் உருவெடுத்துள்ள திடீர் அருவிகள், ஆத்தூர் முட்டல் அருவியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம், கொல்லிமலை, ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், சுற்றுலா பயணிகளை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய 134 ஏரிகள்

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டத்தின் கீழ் 89 ஏரிகளும், மேட்டூர் வடிநில கோட்டத்தின் கீழ் 18 ஏரிகளும் என மொத்தமாக 107 ஏரிகள் உள்ளன. தொடர் மழையின் காரணமாக, இவற்றில் 50 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 11 ஏரிகள் 70 சதவீத கொள்ளளவையும், 13 ஏரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 ஏரிகள் 30 சதவீதமும் நிரம்பியுள்ளன. மேட்டூர் வடிநில கோட்டத்தில் பெரியசிறியேரி, கொட்டகொள்ள படியான், குள்ளம்பட்டி, வண்ணப்பட்டி, வடமனேரி, நச்சம்பட்டி, தும்பல் காட்டுப்பள்ளம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சரபங்கா வடிநில கோட்டத்தின் கீழ் பூலாவரி, மூக்கனேரி, கமலாபுரம் சிறிய மற்றும் பெரிய ஏரி, கல்லேரிப்பட்டி, தளவாய், தேவியாக்குறிச்சி, ஆணையம்பட்டி, ஜங்கமசமுத்திரம் ஏரிகள் உள்ளிட்டவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல் நாமக்கல்லில் 30 ஏரிகள், கிருஷ்ணகிரியில் 50 ஏரிகள், தர்மபுரியில் 4 ஏரிகள் என மொத்தமாக 4 மாவட்டங்களிலும் 134 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன,’’ என்றனர்.

Related Stories:

More