4 மாதத்தில் 2வது முறையாக டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி!: பிரதமர் மோடி, சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 3 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, தனது பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் அப்போது ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய பல்வேறு நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது. மேலும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரித்ததற்கு தனது எதிர்ப்பையும், திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகிய விவகாரங்கள் குறித்தும் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் உடனான அலுவல் பூர்வ சந்திப்பை தொடர்ந்து அரசியல் ரீதியாக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்திப்பார் என தெரிகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வரும் நிலையில், சோனியா காந்தியையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசவுள்ளார். பாஜக எம்.பி.யான வருண் காந்தியையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாகவும், அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5ம் நாள் 5 நாள் பயணமாக டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்திருந்தார். வரும் மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட மம்தா பானர்ஜி முயன்று வரும் நிலையில், அவரது டெல்லி பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 4 மாதத்தில் 2வது முறையாக மம்தா டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: