×

ராஜபாளையம் அய்யனார் கோயிலில் மழை எச்சரிக்கையால் தரிசனத்திற்கு தடை: பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மேற்கு தொடர்ச்சிமலை அய்யனார் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மறு கரையில் புகழ்பெற்ற நீர்காத்தஅய்யனார் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். எனவே கார்த்திகை அன்று கோயிலுக்கு ராஜபாளையம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல ஊர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆற்றில் புனித நீராடிய பின்னர், மறு கரையில் உள்ள அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் முடி எடுப்பது, குழந்தைகளுக்கு காதுகுத்துவது போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துவர். மேலும் ஐயப்பன் கோவிலை தரிசிக்க செல்பவர்களும் இங்கு மாலை அணிவிந்து விரதம் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் வானி லை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆற்றில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நகரில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலேயே தற்காலிக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மீறி வருபவர்களை தடுக்க மலை அடிவாரத்தில் வனத்துறையினரும், காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அய்யனார் கோயில் பகுதி முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதேபோல் கொரோ னா தொற்று பரவல் தடை காரணமாக சஞ்சீவி மலையில் உள்ள குமாரசாமி கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்யவும் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajapalayam Ayyanar temple , Rajapalayam Ayyanar temple barred from darshan due to rain warning: Deserted without devotees
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை