×

பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது: ஆப்கான் ஊடகங்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு

காபூல்: பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், ஆப்கானில் ஆட்சி அமைத்துள்ளனர். இந்தமுறை தாலிபான்களிடம் சாதகமான மாற்றங்கள் தென்பட்டாலும், பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் முடிவில் மட்டும் அவர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சி குறித்து சாதகம், பாதகம் குறித்த கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபன் அரசு புதிய விதிமுறைகளை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபான் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது எனவும் பெண் ஊடகவியலாளர்கள் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் ஆடை அணிந்தவாறு தான் செய்தி அறிக்கைகளை தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொளி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முகமது நபி குறித்தோ, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது எனவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags : Taliban government , Women, show, Afghan media, Taliban
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...