அமெரிக்காவில் கட்டுபாட்டை இழந்து கிறிஸ்துமஸ் பேரணிக்குள் நுழைந்த கார்!: 23 பேர் படுகாயம்; ஒருவர் பலி..!!

விஸ்கான்சின்: அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பேரணி ஒன்றில் வேகமாக சென்ற வாகனம் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார். விஸ்கான்சின் மாநிலத்தில் வக்கிஷா என்ற நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி புகழ்பெற்றதாகும். இவ்வாண்டிற்கான கலைவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பேரணியில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் பாடல்களை பாடியபடியும், வாத்தியங்கள் இசைத்தபடியும், நடனமாடியபடியும் சென்றனர். அதனை நூற்றுக்கணக்கானவர்கள் சாலையின் இரண்டு புறத்திலும் நின்றபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேரணியாக சென்றவர்கள் மீது பயங்கமாக மோதியது.

இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் விஸ்கான்சின் காவல்துறையினர் கூறியுள்ளனர். மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு தப்ப முயன்ற வாகனத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்த காவல்துறையினர், ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக வக்கிஷா நெடுஞ்சாலையை மூடிய விஸ்கான்சின் போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என கூறியிருக்கும் அதிகாரிகள், பிடிபட்ட ஓட்டுநரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More