சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய குழு ஆய்வு..!!

சென்னை: சென்னை வந்திருக்கும் ஒன்றிய குழுவினர் 2வது நாளாக இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனிடையே தமிழ்நாட்டில் மழை, வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட ஒன்றிய குழு சென்னை வந்தடைந்தனர்.

குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி அதில் குழுவினர் தற்போது சென்னை புளியந்தோப்பில் உள்ள வீரப்பன் செட்டி தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து வீரப்பன் செட்டி பிரதான சாலையிலும் ஒன்றிய குழு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. சென்னையில் ஆய்வு தொடங்கியுள்ள ஒன்றிய குழு 4 இடங்களில் ஆய்வு நடத்துகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பிறகு பிற்பகல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக செல்கிறது.

இன்று மாலை புதுச்சேரி செல்லக்கூடிய ஒன்றிய குழு, புதுச்சேரியிலும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. இன்று இரவு புதுச்சேரியில் தங்கி நாளை கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தவிருக்கிறது. இதை தொடர்ந்து நவம்பர் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் ஒன்றிய குழு, வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த இடங்கள் குறித்து முழுமையான அறிக்கை அளித்து விளக்கம் அளிக்க உள்ளது.

Related Stories:

More