×

உலகின் முதல் பிட்காயின் நகரத்தை நிர்மாணிக்கிறது எல் சால்வடார் : அமெரிக்காவை விஞ்சி உலகின் நிதி மையமாக முடியும் என நம்பிக்கை!!

எல் சால்வடார் : உலகின் முதல் பிட்காயின் நகரத்தை கட்டமைக்க போவதாக மத்திய அமெரிக்கா நாடான எல் சால்வடார் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவையும் விஞ்சி உலகின் முதன்மை நிதி மையமாக மாற முடியும் என்ற இமாலய நம்பிக்கை அந்த நாட்டிற்கு உள்ளது. தனக்கென தனி நாணயமே இல்லாத எல் சால்வடார், கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி உலகின் நிதி ஆதார மையமாக கனவு காண்கிறது. ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக கருதப்படும் கிரிப்டோ கரன்சியை உலகமே சந்தேக கண் கொண்டு நோக்குகையில், அதையே தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எல் சால்வடார் முனைந்துள்ளது. அதற்கான முன்னோட்டமாக முதல் நாடாக கிரிப்டோ கரன்சியை அன்றாட பயன்பாட்டில் செல்லத்தக்கதாக அறிவித்த எல் சால்வடார், அடுத்தபடியாக கிரிப்டோ கரன்சிக்கென தனி நகரையே நிர்மாணிக்க போவதாக அறிவித்துள்ளது.

எல் சால்வாடார் நாட்டின் தென் கிழக்கில்  La Union நகரில் பிட்காயின் நகரம் அமைகிறது. இதற்காக 7500 கோடி ரூபாய் மதிப்பின் பிட்காயின் பத்திரங்களை எல் சால்வடார் அரசு வெளியிடுகிறது. இதில் பாதியை பிட்காயினிலும் மற்றொரு பாதியின் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் முதலீடு செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிட்காயின் நகரத்தில் ஒருவர் ஈட்டும் வருவாய்க்கு 10% மதிப்பு கூட்டு வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வருமான வரியோ சொத்து வரியோ அல்லது வேறு எந்த வரிகளோ கிடையாது. இப்போதே பிட்காயினுக்கு மாறி விடுவதால் உலகமே பிட்காயினுக்கு மாறும் சூழல் உருவெடுக்கும் போது, அதன் ஆதார மையமாக தாமே இருக்கலாம் என்பது எல் சால்வடார் நாட்டின் நம்பிக்கையாகும்.


Tags : El Salvador ,United States , பிட்காயின்
× RELATED அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!