செயின் பறிப்பு கொள்ளையனை விடுவிக்கக் கோரி பிளேடால் கழுத்தை அறுத்து காதலி தற்கொலை முயற்சி: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு

திருவொற்றியூர்: மூதாட்டியிடம் செயின் பறித்தவரை விடுவிக்க கோரி, பிளேடால் கழுத்தை அறுத்து அவரது காதலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை பி.கே.என் காலனி 1வது தெருவை சேர்ந்த அம்மாயி (72), நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இவரது வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி அம்மாயி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துக்கொண்டு, வீட்டில் இருந்த 2 செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பினர். அம்மாயி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பினர்.

இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அம்மாயி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (21) மற்றும் 2 சிறுவர்கள் அம்மாயிடம் செயின் பறித்தது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு பிடித்து, அவரிடமிருந்து 12 கிராம் தங்க செயின் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை திருவொற்றியூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், பிடித்து வைத்துள்ள வசந்த்தை விடுவிக்க கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த தேவி (21) என்பதும், கொள்ளையன் வசந்த்தின் கள்ளக்காதலி என்பதும் தெரியவந்தது. தேவி தற்கொலை முயற்சி தொடர்பாகவும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More