×

போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த பிரபல ரவுடியின் கை, கால் முறிந்தது: திமுக பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளி

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் பகுதியை  சேர்ந்தவர் சம்பத்குமார் (48), திமுக பிரமுகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் விநாயகம்  (47) என்பவருக்கும், குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி, சம்பத்குமாரை 8 பேர்  கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. போலீசார் விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி லெனின், போலீசில் சிக்காமல் இருப்பதற்காக,  விநாயகம் வீட்டில் தங்கி இருந்ததும், இதுபற்றி சம்பத்குமார்,  காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல்  கொடுத்ததும், அதற்கு பழிக்குப்பழி வாங்கவே, சம்பத்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.   இதையடுத்து, விநாயகம், அவரது மனைவி கற்பகம் (44), அரிக்குமார் (21), தர் (21), மோகன்வேல் (20), நவீன்குமார் (24), பாலாஜி (52) அவரது மனைவி அமிர்தம் (50) ஆகிய 8 பேரை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான லெனின் கடந்த 2 மாதமாக போலீசில் சிக்காமல் தலைமறைவானார். போலீசார் தனிப்படை அமைத்து, லெனின் செல்போன் சிக்னலை டவர் மூலம் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் மடுவாங்கரை மேம்பாலம் அருகே, லெனின் வருவதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் மாறுவேடத்தில் அங்கு சென்று, லெனினை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில், லெனினின் வலது கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  லெனின் மீது 6 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள்,  காஞ்சிபுரம்,  சோமமங்கலம், புழல், மாதவரம் மற்றும் தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Routi , Police, celebrity rowdy, DMK celebrity murder, main culprit
× RELATED அரக்கோணத்தில் அரசு பள்ளி அருகே ரவுடி வெட்டிக்கொலை