×

கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை மறுசீரமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறையை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக பொதுப்பணித்துறையை மறுசீரமைப்பு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறு சீரமைத்து கோவையை தலைமையிடமாக ஒரு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பொதுப்பணித்துறை மறுசீரமைப்பு செய்து, கோவையை தலைமையிடமாக கொண்டு கோவை மண்டலம் உருவாக்குவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மண்டல கட்டிட தலைமை பொறியாளரின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.  கோவை கட்டுமானம், பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளரின் கீழ் கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர் கோட்டங்களும், கோவை (மின்கோட்டம்), சேலம் கட்டுமானம்,பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளரின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கோட்டங்களும், கோவை மருத்துவ கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில் சேலம், திருப்பூர் கோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கட்டுமானம் முதன்மை தலைமை பொறியாளரின் கீழ் தலைமை கட்டிட கலைஞர், திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு வட்டத்தின் கீழ் தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி நிலையம், பழமையான கட்டிட பாதுகாப்பு கோட்டம், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பொதுப்பணி பணியாளர்கள் பயிற்சி நிலையம், சென்னை மண்டல தலைமை பொறியாளரின் கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு வட்டத்தின் கீழ் வடமாநில, தென்மாநில கோட்டம், கட்டிட கட்டுமான கோட்டம்-1, திருவள்ளூர் கோட்டம், ெசன்னை மின் கோட்டம் ஆகியவையும், சென்னை மருத்துவ கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கீழ் சென்னை கட்டுமான கோட்டம்-1, கட்டுமான கோட்டம்-2, சென்னை மருத்துவ கட்டுமான பராமரிப்பு கோட்டம், மின் கோட்டம்-2, வேலூர் கட்டுமானம், பராமரிப்பு வட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை கோட்டங்களும், விழுப்புரம் மின்கோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் கட்டுமான தலைமை பொறியாளரின் கீழ் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இதில், திருச்சி கட்டுமான பரமரிப்பு வட்டத்தின் கீழ் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் கோட்டங்களும், திருச்சி மின்கோட்டம், மருத்துவ கட்டுமான பிரிவு வட்டத்தின் கீழ் திருச்சி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர் மருத்துவ கட்டுமான கோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் தலைமை பொறியாளரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு வட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் கோட்டங்களும், மதுரை மருத்துவ கட்டுமான பிரிவு வட்டத்தின் கீழ் மதுரை, சிவகங்கை, நெல்லை கோட்டங்களும், நெல்லை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு வட்டத்தின் கீழ் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, நாகர்கோயில், நெல்லை மின் கோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்படும் கோவை மண்டலம், கோவை, தஞ்சாவூர் வட்ட அலுவலகங்களுக்கு 104 பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் 80 பணியிடங்களும் மாறுதல் அடிப்படையிலும், 24 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், மறு சீரமைப்புக்கு பின்னர் பொதுப்பணித்துறையின் கீழ் மொத்தம் 4 மண்டல அலுவலகங்கள், 13 வட்ட அலுவலகங்கள், 56 கோட்ட அலுவலகங்கள் மற்றும் அதன சார்ந்த உபகோட்ட அலுவலகங்கள் ஆகியவை இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Public Sector , Structure, Tamil Nadu Public Works Department, Reconstruction, Government of Tamil Nadu
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...