மதுராந்தகம் அருகே தொடர் மழையால் மண் சுவர் உடைந்து வயதான தம்பதி பலி: வீட்டுக்குள் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது நடந்த சோகம்

சென்னை: மதுராந்தகம் அருகே பெய்த தொடர் மழை காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி மீது மண் சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதாசலம் (70). விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி செந்தாமரை (60). இவர்கள் இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அவர்களது வீட்டின் மண் சுவர் வலுவிழந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நள்ளிரவு வீட்டின் மண் சுவர் இடிந்து படுத்திருந்த வயதான தம்பதி மீதும் விழுந்தது. நேற்று காலை அவர்களுடைய பேத்தி தேநீர் கொடுப்பதற்காக சென்று பார்த்தபோது வீடு இடிந்து விழுந்ததையறிந்து கத்தி கூச்சலிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். ஆனால், சுவர் இடிந்து விழுந்ததில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற சித்தாமூர் போலீசார் இறந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு  மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன். சிவகுமார் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டதோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி பலியானதால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Stories: