×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டி?...அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அறிவித்து போட்டியா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜ சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் நேற்று முதல் தி.நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை கோட்ட தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒப்பிட முடியாது. நீட் தேர்வு பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படுத்தியுள்ளது. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தை விடாமல் முயற்சிக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வுக்கு முன்னால் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு அதன் வாயிலாக அரசியல் ஆதாயத்தை தேடும் எதிர்க்கட்சிகள் இந்த நாடகத்தை கைவிடவேண்டும். தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி இடங்களில் இன்று (நேற்று முதல்) அந்தெந்த மாவட்டங்களில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக விருப்பமனு பெறப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக இந்த தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சி குறித்து அறிவிக்கப்படும். அப்போது தனித்து போட்டியா அல்லது கூட்டணி அறிவித்து போட்டியா என்று முடிவு செய்யப்படும். அதிமுக உடன் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு சட்டம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு  சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால்  வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது. கரணம்  தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான்  நம்முடைய காவல்துறையினர்  பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு  சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக  வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. அன்னாரது குடும்பத்தினருக்கு  என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Tags : Baja ,Annamalai , Urban local body elections, BJP stand-alone contest, Annamalai
× RELATED சொல்லிட்டாங்க…