×

சட்டவிரோதமாக பாலியல் தொழில் சென்னையில் 151 மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை

* அழகிகள், வடமாநில இளம் பெண்கள் மீட்பு
* மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்பு குறித்தும் விசாரணை
*மாநகர காவல் துறை நடவடிக்கை

சென்னை மாநகரம் முழுவதும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தியது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக வந்து புகாரை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, சென்னை முழுவதும் ஸ்பா உட்பட 151 மசாஜ் சென்டர்களில் தனித்தனியாக போலீசார் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அழகிகள் உட்பட வடமாநில இளம் பெண்கள் சிக்கினர். சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ்  சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து மாநகரம் முழுவதும் சென்னை முழுவதும் முறையாக மற்றும் அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும் படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி உளவுத்துறை அதிகாரிகள் மாநகர காவல் எல்லையில் அனுமதியுடன் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் குறித்தும் அதேபோல், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் புள்ளிவிபரங்களுடன் அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையின்படி, ஒரே நேரத்தில் மாநகர காவல் எல்லையில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்த துணை கமிஷனர் தலைமையில் 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த உத்தரவுப்படி நேற்று 12 காவல் மாவட்டங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக அண்ணாநகர், விருகம்பாக்கம், கே.ேக.நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட மாநகரம் முழுவதும் தனிப்படையினர் முறையாக  மற்றும் முன் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வரும் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தினர்.

நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், சட்டவிதிகளின் படி மசாஜ் சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அதில் பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் இளம் அழகிகள் மற்றும் வடமாநில பெண்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை மயக்கி ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வந்தது தெரியவந்தது. அப்படி பாலியல் தொழில் நடந்த மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் அழகிகளை மீட்டனர். சோதனையின்போது மசாஜ் சென்டர் நடத்துவதற்கான அனுமதி சான்றுகள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரும்பாலான மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பாக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அனுமதி சான்றுகளை வைத்தும், ஒரே அனுமதி சான்றுகளை வைத்து பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம் பெண்களும் மீட்கப்பட்டனர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு இன்ஸ்பெக்டர்களாக இருந்த சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் பிரபல பாலியல் புரோக்கர்களான டைலர் ரவி, பூங்கா வெங்கடேசனிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு சென்னையில் தடையின்றி பாலியல் தொழில் செய்ய அனுமதித்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் நடந்த அதிரடி சோதனை பாலியல் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ரகசிய அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நேற்று மாநகரம் முழுவதும் ஸ்பா உள்பட 151  மசாஜ்சென்டர்களில் சோதனை நடத்தியது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , Illegal, Sex Occupation, Chennai, Massage Center, Action Check
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!