ஊட்டியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது: கோவை, புதுச்சேரியை சேர்ந்தவர்கள்

ஊட்டி: ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஒருவர் ரூ.500 கொடுத்து மதுபானம் கொடுக்குமாறு கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த ரூபாய் நோட்டை பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டி போலீசார் கள்ள நோட்டு மாற்ற முயன்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், கோவை கிணத்துக்கடவு ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (33) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் தீனதயாளன், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் (25) என்பவருடன் தலைகுந்தா பகுதியில் தங்கி ஓட்டலில் வேலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையில் அதிரடி சோதனை செய்தனர். அங்கு மேலும் மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊட்டி காந்தல் குருசடி காலனியை சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பவர் கோவையில் இருந்து கள்ள நோட்டுகளை வரவழைத்து, அவற்றை புழக்கத்தில் விட தீனதயாளன், கோபிநாத் ஆகிய 2 பேரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அப்துல் ரகுமான் வீட்டில் நடத்தி சோதனையில் ரூ.500 கள்ளநோட்டுகள் 50 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து மொத்தம் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் 51 பறிமுதல் செய்யப்பட்டது.  இவர்கள் எவ்வளவு காலமாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வருகின்றனர்?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? யார் மூலம் கள்ளநோட்டு நீலகிரிக்கு கொண்டு வரப்படுகிறது? என்பது குறித்து  போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More