ஆசை வார்த்தை கூறி 18 வயது கல்லூரி மாணவனை கடத்திய 21 வயது பெண்: தந்தை போலீசில் புகார்

ஈரோடு: கல்லூரி முதலாமாண்டு படிக்கும் 18 வயது மாணவனை ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்த 21 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில்  பாதிக்கப்பட்ட தந்தை புகார் மனு அளித்தார். ஈரோடு சுல்தான்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி, நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி. எனது மூத்த மகன், கால்பந்து வீரர், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். எங்களது வீட்டிற்கு அருகே கணவர் இல்லாமல் வசித்து வரும் 21 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது மகனை ஆசை வார்த்தை கூறி அவர்களின் கொத்தடிமை போல் நடத்தி வந்தனர். அவர்கள் மீது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

அதன்பேரில், போலீசார் விசாரணையின்போது, அப்பெண் உட்பட அவரது குடும்பத்தினர் என் மகனை இனி தொடர்பு கொள்ளமாட்டோம் என எழுதி  கொடுத்து சென்றனர். இந்நிலையில், என் மகனிடம் மீண்டும் ஆசை  வார்த்தை கூறி அழைத்து சென்று விட்டனர். கடந்த ஒன்றரை வருடங்களாக என் மகன் எங்கு உள்ளார் என தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தற்போது, ஈரோடு  மாவட்டம் பூந்துறையில் வசித்து வருவதாக தகவல்  கிடைத்து அங்கு சென்று பார்த்தபோது என் மகனை எனக்கு  காட்டவில்லை. என் மகனை அனுப்பி வைக்குமாறு கேட்டபோது என்னையும்,  என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

* ‘‘எங்கள லவ் பண்ண விடமாட்டேங்கறாங்க’’

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சர்ச்சுக்கு சென்று வந்த போது 19 வயதான கல்லூரி மாணவருடன் நட்பு ஏற்பட்டது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இவர்களின் காதல் மெசேஜ் பார்த்த பெண்ணின் கணவர் கண்டித்தார். ஆனாலும், அந்த பெண் கேட்கவில்லை. அந்த வாலிபரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தெரிந்து உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண், மாணவருடன் மாயமாகி விட்டார். ‘‘நாங்கள் யாரையும் தொந்தரவு பண்ணவில்லை, எங்கள லவ் பண்ண விடமாட்டேங்கறாங்க’’ என அந்த பெண் கூறி மாணவனுடன் சென்றதாக தெரிகிறது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: