2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பாஜவுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும்: திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்

ராமநாதபுரம்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த சமூகநீதி ஒற்றுமை கருத்தரங்கில் திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சமீபத்திய கனமழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நேரடியாக களமிறங்கி போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட திமுக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விசிக சார்பில் பாராட்டுகிறோம். பாஜவை எதிர்ப்பதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. வட, தென் மாநிலங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் என பாஜவை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தனிமைப்படுத்த வேண்டும். பாஜவுக்கு எதிராக அனைத்து கட்சிகள் மட்டுமல்ல, அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இயங்குகிறோம். இதற்கு அச்சாணியாக பல்வேறு மாநில கட்சித் தலைவர்களை விசிக சந்திக்க உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி நிபந்தனையின்றி திரும்ப பெற்றுள்ளார். இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: