மும்பை அருகே அரபிக்கடலில் அமைந்துள்ள பிரமாண்ட எண்ணெய் கிணற்றை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு: ஊழியர்கள் கொந்தளிப்பு

புதுடெல்லி: அரபிக்கடலில் அமைந்துள்ள மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் கிணற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்க, ஒன்றிய அரசுக்கு பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு மும்பை கடற்கரையையொட்டி, அரபிக்கடலில் அமைந்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மிகப்பெரிய, முக்கியமான எண்ணெய் கிணறு இது. இந்த எண்ணெய் கிணற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்க பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு, ஓஎன்ஜிசி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகங்களின் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 17 ஆயிரம் அதிகாரிகளைக் கொண்ட இந்த சங்கம், மும்பை எண்ணெய் கிணற்றின் 60 சதவீத பங்குகள் மற்றும் செயல்படுத்தும் உரிமத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவது என்ற அரசாங்கத்தின் நோக்கத்துடன் நாங்கள் முழுமையாக இணைகிறோம். ஆனால் அதற்காக, ஓஎன்ஜிசி நிறுவனத்தை தனியாருக்கு தருவதற்கு பதிலாக, தற்போதைய நிர்வாக முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த போதும், ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கிணறுகளை ஓஎன்ஜிசி தொடர்ந்து தோண்டி வருகிறது என்பதை கடந்த 3 ஆண்டுகளின் தரவு காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற ஆபத்தான முடிவுகளை நிச்சயம் தனியார் நிறுவனத்தினர் எடுக்க முன்வர மாட்டார்கள். எனவே, தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு பதிலாக விரைவான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட சலுகைகளை ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு வழங்கும் பட்சத்தில் இப்போதைய நிலையை காட்டிலும் அதிகளவில் உற்பத்தியை பெருக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More