×

தைவானில் தூதரகம் திறப்பதால் ஆத்திரம் லிதுவேனியாவை மட்டம் தட்டிய சீனா: தூதர் திரும்ப அழைப்பு

பீஜிங்: தைவானில் தூதரக நடவடிக்கைகளுக்காக பிரதிநிதிகள் அலுவகத்தை திறந்ததால் லிதுவேனியா உடனான உறவை சீனா தரமிறக்கி உள்ளது. கடந்த 1949ம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடானது. அதை சீனா ஏற்கவில்லை. தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என அந்நாட்டு அதிபர் ஜின்பிங் சமீபத்தில் அறிவித்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த லிதுவேனியா நாடு கடந்த வியாழக்கிழமை தைவானில் தூதரக பணிகளை மேற்கொள்ள தனது பிரதிநிதிகள் அலுவலகத்தை திறந்தது. இது, சீனாவை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக லிதுவேனியா உடனான உறவை சீனா தரமிறக்கி உள்ளது.

இனி சீனாவில் லிதுவேனியாவின் தூதரகம், அந்நாட்டு தூதர் இல்லாமல் மட்டுமே செயல்பட முடியும். அதே போல, லிதுவேனியாவில் உள்ள தனது நாட்டு தூதரையும் சீனா திரும்ப அழைத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு லிதுவேனியா, சர்வதேச அளவில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது. தைவான் என்ன செய்தாலும், அது சீனாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது,’ என கூறப்பட்டுள்ளது. தைவானுடன் 15 சிறு நாடுகளே தூதரக உறவை வைத்துள்ளன. லிதுவேனியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

* மாயமான டென்னிஸ் வீராங்கனை வீடியோ
டென்னிஸ் இரட்டையர் பிரவில் உலகின் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான சீனாவின் பெங் ஷாய் (35), சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த முன்னாள் துணை பிரதமர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். அதன் பிறகு, ஷாய் திடீரென மாயமாகி விட்டார். இது, சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகித்தன. இந்நிலையில், பீஜிங்கில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் குழந்தைகளுக்கு ஷாய் ஆட்டோகிராப் போடுவது, நண்பர்கள், பயிற்சியாளருடன் வெளியே உணவருந்த செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், ஷாயின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த வீடியோக்கள் மட்டுமே போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கம் கூறி உள்ளது.

Tags : China ,Lithuania ,Taiwan , China arremete contra Lituania por apertura de embajada en Taiwán: recordó embajador
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...