அடுத்த நிதியாண்டில் ஓய்வுபெறும் 28 சார்பதிவாளர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை 6 மாதத்துக்குள் வசூலிக்க வேண்டும்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவு

சார்பதிவாளர்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை நிலுவை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பு ஏதும் இருப்பின் அவ்வினங்களை உடன் தீர்வு செய்ய சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

சென்னை: 2022-2023ம் நிதியாண்டில் 28 சார்பதிவாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பை ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்குள் வசூல் செய்யவும், நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு தீர்வு காணவும் பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

2022-2023ம் நிதியாண்டில் 28 சார்பதிவாளர் ஓய்வு பெற உள்ளனர். சார்பதிவளர்களின் ஓய்வு பெறும் தேதியை பணி பதிவேட்டுடன் சரிபார்த்து பின்னர் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு அனுப்ப வேண்டும். தங்கள் பதிவு மாவட்டம்/மண்டலங்களை பொறுத்து இப்பட்டியலில் சார்பதிவாளர்களின் பெயர் ஏதேனும் விடுபட்டிருப்பின் அல்லது தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பின் அவை குறித்த விவரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இப்பட்டியலில் உள்ள சார்பதிவாளர்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை நிலுவை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பு ஏதும் இருப்பின் அவ்வினங்களை உடன் தீர்வு செய்ய சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், ஓய்வு பெறவுள்ள அலுவலர்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள இழப்பினை வசூல் செய்தல் போன்ற அனைத்தையும் பணி ஓய்வு பெறும் நாளுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் சார்பதிவாளர்களை பொறுத்து இழப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்த அறிக்கை அனுப்பும்போது, சார்பதிவாளர்களின் பெயரை முதலெழுத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: