உலக மீனவர் தினம் கொண்டாட்டம்; குமரியில் கடலில் மலர் தூவி மரியாதை.!

நாகர்கோவில்: குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக குமரி கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால் மிக எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில், உலக மீனவர் தின கொண்டாட்டங்கள் நடந்தன.  படகுகளை அலங்காரம் செய்து அர்ச்சித்தனர். தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் சமூக விலகலுடன் மீனவர்கள் பங்கேற்றனர். மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. கடலில் மலர் தூவியும் வழிபாடு நடத்தினர். மீனவ கிராமமான நீரோடி முதல் சின்னமுட்டம் வரை உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம் நடந்தது.

கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளுக்கு அர்ச்சிப்பு நிகழ்ச்சியும், தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடைபெற்றது. குமரி மாவட்ட மீனவ கூட்டமைப்பு மற்றும் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையம் சார்பாக, தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மீனவர் நாள் விழா பொதுக்கூட்ட மாநாடு நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவ மக்களும், உள்நாட்டில் வசிக்கும் மீனவ மக்களும் கலந்து கொள்கிறார்கள். இன்று மதியம் 2 மணிக்கு முள்ளூர்துறை ஆலய வளாகத்தில் இருந்து ஒரு பேரணியும், தேங்காப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மற்றொரு பேரணியும் தொடங்கி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை அடைகிறது.

மீனவர் தினத்தையொட்டி கடற்கரைகளில் கேக் வெட்டியும் மீனவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன் துறையில் நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மீனவர் காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் தலைமை வகித்தார். மீனவர் காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெசோ மேரி முன்னிலை வகித்தார். ராமன்துறை பங்கு பணியாளர் மேக்சிமியன் ஜேம்ஸ் பிரார்த்தனை செய்தார். விஜய் வசந்த் எம்பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ  ஆகியோர் கடலில் பால் ஊற்றி மலர் தூவினார்கள். தொடர்ந்து நல உதவிகள் வழங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டார தலைவர் டென்னிஸ், மாநில  பொது செயலாளர் டாக்டர் பினுலால் சிங், அம்சி ஊராட்சி காங்கிரஸ் செயலாளர் ஜாண்றோஸ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகி ஸ்டுவர்ட், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, ஊராட்சி ஒன்றிய  கவுன்சிலர்கள் விஜிலா, காட்வின், மாநில பேச்சாளர் சுஜின் மற்றும் பன்னீர்செல்வம், முத்து நாயகம், லூக்காஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More