மேலூர் அருகே தூண்டிலில் மீன் பிடிக்கும் வினோத விழா

மேலூர்: மேலூர் அருகே தூண்டில் போட்டு மீன்களை பிடிக்கும் வினோத திருவிழா நேற்று நடைபெற்றது. கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் கிராமங்களில் ‘ஊத்த கார்த்திகை’ என்னும் பெயரில் கோழி, ஆடு, மீன் போன்ற அசைவ உணவு தயாரித்து உண்பது வழக்கம். இதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள ஓட்டகோவில்பட்டியில் ஆண்டு தோறும் ஒரு வினோத விழா தொடர்ந்து வருகிறது. இங்குள்ள ஊரணியில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களை ஒரு நாள் மட்டும் யார் வேண்டுமானலும் தூண்டில் மட்டும் பயன்படுத்தி பிடித்து சமைத்து சாப்பிடலாம்.மற்ற நாட்களில் அந்த ஊரணியில் யாரும் மீன் பிடிக்க அனுமதியில்லை.

இந்த ஊரணியில் நாட்டு மீன்களான அயிரை, சிலேப்பி, விரால், குரவை போன்ற மீன்கள் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இவ்வகை மீன்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக, சுற்று பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேற்று தூண்டிலுடன் அந்த ஊரணியை சுற்றி அமர்ந்து மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர். இதில் தலா 2 கிலோ மீன்கள் வரை அவர்களின் தூண்டிலில் சிக்கியது. இவற்றை தங்கள் வீடுகளில் சமைத்து உண்டால், அந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதியில் உள்ளது. மேலூர் பகுதியில் நடக்கும் கார்த்திகை திருநாளின் வினோத திருவிழாக்களில் இதுவும் ஒன்று.

Related Stories: