×

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு: முதலமைச்சருடன் சேர்த்து எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. இதில், 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைமை அறிவுறுத்தியதால் அவர்கள் அமைதி காத்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்று, கட்சித் தலைமையை தொடர்ந்து சந்தித்து வந்தனர். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேச்சு நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 4:00 மணிக்கு நடந்த விழாவில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாநில அமைச்சரவையின் பலம், முதல்வரையும் சேர்த்து 30 ஆக அதிகரித்தது. இன்று பதவி ஏற்று கொண்டவர்களில் 5 பேர், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajasthan , Rajasthan, new cabinet, reshuffle
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...