மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம்: கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

கோவை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறைத்தலைவராக உள்ள பேராசிரியர் ரகுநாதன் இரவு நேரங்களில் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்புவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற பாலியல் தொல்லை அளித்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அக்கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பேராசிரியர் ரகுநாதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.

இந்நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின் படி பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்தும் குழுவினர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் ரகுநாதன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்ததையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: